புதன், 27 மே, 2015

மன வளக் கலை – மூச்சுப் பயிற்சி

மன வளக் கலை – மூச்சுப் பயிற்சி
” மூச்சுப் பயிற்சி உயிருக்குத் தேர்ச்சி “
                     --கி.து. வாண்டையார் – இன்ப வாழ்வு – ப. 77
                               சோம்பல் மிகவும் சுகமானதுதான் ஆனால்  அது மிகவும் ஆபத்தானது. எந்திரமயமான இவ்வுலகில் தந்திரம் பயின்று வாழ்தல் நன்று; இன்றேல் பருவத்திற்குரிய பயன்களை நுகர முடியாமல் வாழ்க்கை பிறர் தோள் கடுக்கும் சுமையாகிப் போகும். உடலையும் உள்ளத்தையும் சீர்படுத்தவும் செம்மைப்படுத்தவும் கற்றே ஆகவேண்டும்.
 “ பயிற்சியா ? நேரமேது ? ஆம் பேச சுற்ற வம்பளக்க நேரமிருக்கும் ஆனால் உடலைக் காக்க 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் கிடைக்காது.” ( மேலது )
                                நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிப்பது அறிவியலா ;நோய்கள் அண்டவிடாமல் வாழக் கற்பது அறிவியலா ? இளைய தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.வளமாகவும் நலமாகவும் வாழ்வதற்கான வழிமுறைகளை நமது முன்னோர்கள் நமக்குத் தெளிவாக நிறையவே சொல்லியிருக்கிறார்கள். தமிழில் பயிருக்கு இறைத்த நீர் – ஆங்கில வழியில் விழலுக்குப் பாய்ந்துவிட்டதே.
                        ஐயா அவர்கள் மூச்சுப் பயிற்சியை அனிச்சைச் செயலாகக் கருதாமல் இச்சைச் செயலாகக் கருதி விருப்புடன் செய்ய வேண்டும். பயிற்சியும் முயற்சியின் பாற்பட்டதே. அம்முயற்சி வினையைத் திருவினையாக்கும்.
    “ மூச்சை ஒழுங்காக விடுவதற்கே சோம்பல் பட்டால் உங்கள் மூச்சே அதிரடி நோய்களைக்கொடுத்து அனுபவியடா அனுபவி என்று இரக்க ஈவு இல்லாமல் உங்களை அதிர வைக்கும்.” –( மேலது- ப.87)
                                 என்று ஐயா அவர்கள் சுகமாகவே வாழ விரும்பும் சோம்பேறிகளை எச்சரிக்கின்றார்கள்.
திருமந்திரம்
    உன்னை நீ ஓதி உணர்வாய் என்பது மந்திர மொழி.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றை பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே –2344
  மூச்சுக் காற்றை அளந்து அறிந்துகொண்டால் எமனையே எட்டி உதைக்கலாம் என்கிறார் திருமூலர்.
  ” ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை மட்டுமே மூச்சு விடுகிறது; எனவே நீண்டநாள் வாழ்கிறது. மனிதன் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை சுவாசித்தால் ஆயுள் 1500 ஆண்டுகள்” என்கிறார் இர. வாசுதேவன்.
   இவற்றை எல்லாம் அறிவியலாளர்கள் முறைபடி ஆராய்ந்து வருகிறார்கள். இதுநாள்வரை சித்தர்கள் சாத்திரம் பொய்யோ – புனைந்துரையோ என்று உரைத்தார் இலர். இன்று உலக மக்கள் இவ்வுண்மைய உணர்ந்து வருகிறார்கள்.
  காயம் இது பொய்யன்று ; வெறும் காற்றடைத்த பையுமன்று உயிர்ச் சக்தியாகிய காற்றுடையது. மூச்சுப் பயிற்சி உயிருக்குத் தேர்ச்சி என்ற ஐயா அவர்களின் சொல் வண்ணம் நான்கே சொற்களில் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் அரிய கலையை – அறிவியலை அறிவுறுத்துகிறது.
      “ சுகமான செளகரியமான நிலையில் கீழே உட்காரவும் ; நாற்காலியிலும் அமரலாம் மூச்சை உள்ளே இழுத்துச்  சில வினாடிகள் நிறுத்தி மீண்டும் வெளியே விடவும் ; தொடர்ந்து நிதானமாகச் செய்யவும்.
       அன்றாடம் காலையில் பத்து நிமிடம் மாலையில் பத்து நிமிடம்  தவறாத பயிற்சியாகக் கொள்ளவும்.
 இப்பயிற்சியால் உடம்பில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறி சுத்தக் காற்று உடலிலுள்ள அவயவங்களுக்குப் புத்துணர்வு தரும் “ -- கி.து. வாண்டையார் – இன்பவாழ்வு –ப. 86
 
  

இஃது ஐயா அவர்களின் அனுபவ அறிவியல்.இவ்வறிவியல் பாடத்தை முறையாகப் படித்தால் தேர்ச்சி பெறலாம். முன்னோர்கள் மொழிந்தவற்றைப் படிக்கும்போது இது ஏதோ ஒரு கதைபோலத் தோன்றும் ; உண்மை அதுவல்ல…..
 ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா அவர்கள் வாழும் கலையை- நல்ல வண்ணம் வாழ விரும்புவோர்க்கு வற்புறுத்தி வருகின்றார்கள். வாழ வழிகொடுக்கும் வள்ளலே கண்கண்ட சாட்சியாக – காட்சியாக விளங்குகிறார்கள்.
 மறைமலையடிகளார் – மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை – நூலில் ……… “ உடம்பில் தட்ப வெப்பங்கள் என்றும் ஒரு நிலையாக இருத்தற்குங் கட்டாயமாகச் செயற்பாலது மூச்சுப் பழக்கமேயாகும். மூச்சுப் பழக்கமானது விடுதல் இழுத்தல் நிறுத்தல் என்னும் மூன்று உறுப்புகளோடு கூடி நடைபெறுவதாகும். இவற்றுள் விடுதல் என்பது உடம்பின் உள்நின்ற காற்றை வெளியே கழித்தல் – இழுத்தல் என்பது வெளியேயுள்ள தூய காற்றை உடம்பினுள்ளே வாங்குதல்  - நிறுத்தல் என்பது அங்ஙனம் உள்ளிழுத்த காற்றை உடம்பினுள்ளேயே சிறிது நேரம் நிலைப்பித்தல் இவ்வாறு காற்றை மூக்குப் புழைகளால் மாறி மாறிப் புறங்கழித்து உள்ளிழுத்து உள்நிறுத்துதலால் உடம்பில் விந்து நாதங்களாகிய் மிக நுண்ணிய தட்பவெப்பங்கள் ஒரு நிலையாகப் பரவிக் கருவிகளை வலுப்படுத்தி உடம்பைப் பொன் போற்றூயதாக்கும். (ப.41)
    “ நுரையீரலின் முழுப்பாகமும் அசைந்து உயிர்க் காற்றை இழுத்து நிரப்பி வெளியிடுமானால் நமது உடம்பிற்கு நோயே வராது. நம்முன்னோர்கள் இருந்த காலத்தில் அவர்களின் மார்பினுள்ளே இருந்த இந்த உறுப்பின் முழுப்பாகமும் அசைந்துகொண்டே இருந்தது. இந்தப் புது நாகரிகக் காலத்திலோவென்றால் மக்களிற் பெரும்பாலார்க்கு இந்த உறுப்பு முழுவதும் அசைவதே இல்லை காற்பங்கோ அரைக்காற் பங்கோ தான்……..

                                                                                              ----தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக