செவ்வாய், 19 மே, 2015

தொல்காப்பியம் –அறிவியல் ஆய்வுக்கு


தொல்காப்பியம் –அறிவியல் ஆய்வுக்கு
தொல்காப்பியம் புள்ளி
புள்ளியின்றித் தமிழ் மொழியே இயங்காது. ஒரு புள்ளியைக் கொண்டு நுட்பமான வேறுபாடுகளை எழுத்தில் இயக்கினர் தமிழர். எழுத்திலோ எண்ணிலோ புள்ளி இடும் முறையைக் கணக்கியலுக்கு வழங்கியவர் தமிழரே.
தொல்காப்பியர் மெய்மயங்கியல் என்னாது ”புள்ளி மயங்கியல்” என்றார். “ மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் “என்றார்.
க- ஒரு மாத்திரை ஒலி அளவு
க் – ½ மாத்திரை
“எகர ஒகரத் தியற்கையு மற்றே”
எ- ஒ- இரண்டும் புள்ளி பெறும் – புள்ளி பெற்றால் குறில்கள்
ஒலி அளவு குறையும் ஒரு மாத்திரை – புள்ளி இல்லையென்றால் நெடில்கள் 2 மாத்திரைகள்
இடத்திற்கு ஏற்றாற்போல புள்ளி மதிப்பைப் பெறும் என்பதைக் கண்டறிந்தவன் தமிழனே. புள்ளியை எழுத்தில் ஏர்றி மதிப்புறச் செய்தான். புள்ளி எழுத்தில் மதிப்பைக் கூட்டவும் குறைக்கவும் பயன்பட்டதால் அது எண்ணிலும் ஏற்றம் பெற்றது.
எண்ணையும் எழுத்தையும் கண் எனப் போற்றிய தமிழர் எழுத்தை ஆக்கியதைப்போல் எண்ணையும் ஆக்கினர்.
உலகக் கணக்கியல் வரலாற்றில் புள்ளி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கணக்கில் தசம பின்னங்களைக் குறிக்க ஒரு புள்ளி இடுவர்  0.5  இந்தப் புள்ளி இல்லையென்றால் கணக்கியல் இயங்குமா ?
புள்ளியிட்டு எழுத்தின் மதிப்பைக் குறைத்தது பின்னாளில் தசம பின்னக் குறியீட்டுக்கு முன்னோடியாகும்.( செம்மொழி மாநாட்டில் படிக்கப்பெற்ற இக்கட்டுரையினை முழுமையாக அறிய “உயிருக்குநேர் – தமிழர் அறிவியல் எனும் என் நூல்களில் கண்டு தெளிக.)

திணை
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே
                                                              தொல். சொல்.1: 1, 2
மக்களை உயர்திணை எனக் கூறுவர் ; மக்கள் அல்லாத ஏனைய உயிர்களை அஃறிணை எனக் கூறுவர்.
                                       
                        
சொல்லும் பொருளும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
                                                                தொல். சொல். 5: 1
சொற்கள் அனைத்தும் பொருள் உணர்த்தும்                                                              

உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே
                                                                            தொல். சொல். 8: 95
சொல்லின் பொருளை உணர்தல், சொல்லைக்  கேட்போர் அறிவினைப் பொறுத்தது.
                                                      
முதற் பொருள்
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே
                                                                                தொல். பொரு.1: 4
முதற் பொருள் எனப்படுவது நிலம், பொழுது  ஆகிய இரண்டின் தன்மை எனக் கூறுவர் அவற்றின் இயல்பினை நன்கு அறிந்தோர்.                                                                                        
பிரிவு
பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே
                                                                          தொல்.பொரு. 1 : 35
 பொருள்தேடிப் பிரிதலும் நிலத் தலைமக்களுக்கு உரியதே.
                                                          
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான
                                                                          தொல்.பொரு. 1 : 36
உயர்ந்தோர் பொருள்தேடிப் பிரிதல் அறத்தோடு முறையாக அமையும்.                                                     
முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை
                                                    தொல்.பொரு. 1 : 37                                                       
கடல்வழிப் பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை.
                                                                     
பகை வெல்லல்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை ...
                                                                         தொல்.பொரு. 2 : 7 :  7, 8                                                       
காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணைபோல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை.
                                                                               
பெருமையும் உரனும் ஆடூஉ மேன
                                                                           தொல். பொரு. 3: 7
பெருமையும் வலிமையும் ஆண்மகனுக்கு இயல்பு.
                                                         
பெண்டிர் இயல்பு
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப
                                                                              தொல்.பொரு. 3: 8
அச்சம், நாணம், மடன் (பேதைமை ) என்ற மூன்று பண்புகளும்  நாள்தோறும் முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பாம்.
                                              
உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று ... 
                                                               -தொல்.பொரு. 3 : 23: 1, 2
உயிரினும் நாணம் சிறந்தது ; நாணத்தைக் காட்டிலும் குற்றம் தவிர்ந்த மெய்யுணர்வாகிய கற்புச் சிறந்தது.
                                  
திருமணம்
வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே
                                                                  -தொல். பொரு. 3: 50
 (காதல்)  யாவர்க்கும் தெரிந்த மணந்து கொள்ளுதல் ; யாருக்கும் தெரியாது மணந்து கொள்ளுதல் எனத் திருமணமுறை இருவகைப்படும்.

இல்லக்கிழத்தியின் பண்புகள்
கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
                                                   -தொல். பொரு. 4: 11: 1 - 4
கற்புடைமையும் கணவனிடத்துக்கொண்ட மாறாத அன்பும் நன்மைநாடி ஒழுகும் ஒழுக்கமும் மென்மையாகப் பிறரைப் பொறுக்கும் தன்மையும் குறை மறைத்து ஒழுகும் நிறையும் விருந்தினரைப் போற்றலும் உறவினர்களைக் காத்தலும் இவை போன்றன பிறவும் இல்லக்கிழத்தியின் பண்புகள்.
அலர் தூற்றல்                                               
 அலரில் தோன்றும் காமத்து மிகுதி
                                                       தொல். பொரு. 4: 22
ஊரார் தூற்றும் அலரால் தலைவன் தலைவி  காதல் மிகுதியாகும்.
                                                            
கருவுறும் காலம்

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று  உறையார் என்மனார் புலவர்
                                                                -தொல். பொரு. 4: 46:  1, 2
தலைவிக்கு மாத விலக்குத் தோன்றி ( மூன்று நாள் கழிந்த பின்பு ) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளைவிட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர். இதனால் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க                                                                    


பெண்ணின் பண்புநலன்கள்
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான
                                                          -தொல். பொரு. 5 : 14
அடக்கம், அமைதி, நேர்மை, உண்மை உரைக்கும் சொல்வன்மை, நன்மை தீமை பகுத்தறியும் அறிவு, உள்ளக் கருத்தறிதல் அருமை என்பன பெண்ணின் பண்புநலன்கள்.
உயர்ந்தோர் கூற்று
உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே
                                                            -தொல்.பொரு. 5: 21

உயர்ந்தோர் கூற்று உலக வழக்கொடு பொருந்தி அமைதலால், அந்த வழக்கு  வழிப்படுத்தல் செய்யுளுக்கு உரியதோர் முறைமையாகும்.

உயிர்களின் இன்ப விழைவு
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்
                                                                           -தொல். பொரு. 5: 27

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் மனம் பொருந்தி வரும் விருப்பமுடைமை ஆகும்.
                                                               
எட்டுவகை மெய்ப்பாடுகள்
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
                                                                              -தொல். பொரு. 6 : 3
சிரிப்பு, அழுகை, இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என உடம்பின்கண் தோன்றும்  உணர்ச்சிப் புலப்பாடுகள் எட்டு வகைப்படும் என்பார்கள்.
                                                         
புறநிலை வாழ்த்து
வழிபடுதெய்வம் நின்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
                                                  தொல். பொரு. 8 : 106 : 1 - 3
 புறநிலை வாழ்த்து, வழிபடு தெய்வம் உன்னைப் பாதுகாத்திருக்கக்  குற்றமற்ற செல்வமொடு நின் தலைமுறை  வழிவழியாகச் சிறந்து வாழ்க என்ற பொருளில் அமையும்.
                                                                       

மக்கள்  ஆறு அறிவினர்
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
                                                            தொல். பொரு. 9 : 27: 6, 7
ஆறு அறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் மனத்தினாலும் அறிவது.  மக்கள் தாமே  ஆறு அறிவுயிரே (தொல்.1532 : 1 ) என்பார்.
                                                              

அறிவியல் சிந்தனை
புறக் காழனவே புல் என மொழிப
                                            தொல்.பொரு. 9 : 86
புற வயிரம் உடைய பனை, தென்னை, மூங்கில் போன்றவை புல் வகையைச் சார்ந்தவை என்பர்.                                                                    

அகக் காழனவே மரம் என மொழிப
                                                  தொல்.பொரு. 9 : 87
                                  
உள் வயிரம் உடைய வேம்பு, தேக்கு போன்றவை மர வகையைச் சார்ந்தவை என்பர்.
                                                                             
உலகத் தோற்றம்                                                                                    
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
                                     தொல். பொரு. 9 : 91 : 1, 2
உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுள் பொருள், பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார்.
உயர்ந்தோர் வழக்கு                                                                  
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான
                                                                    தொல். பொரு. 9 : 94
உயர்ந்தோர் கூறும் வழக்கால் மரபு தோன்றுகிறது. வழக்கை உருவாக்குவதும் செயல்படுத்துவதும் உயர்ந்தோரே.

                                               முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக