ஞாயிறு, 10 மே, 2015

அறிவியல் – மழை


அறிவியல் – மழை

மழை அறிவியல்
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகி
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு எர்பு
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே ….
                        கருவூர்க் கலிங்கத்தார், அகநா.183: 6-10
பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது.




மழைக் காலத் தொடக்கம்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின்
                              இளங்கீரந்தையார், குறுந். 148 : 2 – 4
சிறு சதங்கையில் அமைந்துள்ள காசுகளைப் போலக் கொன்றை மரம் மொட்டுக்களை ஈன்றது கொன்றையின் முகைகளும் குருந்தின் (காட்டு எலுமிச்சை மரம்) முகைகளும் பெருந்தண்மையால் மழை பெய்யும் காலம் என்று அறிந்தும் மழை பெய்யாமல் மலராமல் திகைத்தன.இத்தகைய காலத்தைக் கார் காலம் அன்று என்று நீ கூறுவாயாகில்... (முல்லைத் திணை )
பண்டைய நாளில் மழைக் காலம் அறியப்பட்ட முறை  - பருவங்கள் மட்டும் அறியப்பட்டனவா – திங்கள் கணித முறை இருந்ததா திணை (நில) வழிஆய்க.   


வலமாகஎழ- மழை பொழிதல்
மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங் கவினிய ஏமுறு காலை
                                     மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே.

–  மழை பொழிதல்
துஞ்சுவது போல இருளி விண்பக
இமைப்பதுபோல மின்னி உறைக்கொண்டு
ஏறுவதுபோலப் பாடு சிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர்தளி பொழிந்த வார் பெயல் கடைநாள்
                                       இடைக்காடனார், அகநா. 139 : 1- 5

கார்காலத்தின் கடைநாளில் நீர்கொண்ட மேகம் உறங்குவது போல இருண்டு வானம் பனிக்கும்படி மின்னியது; நீரை முகந்து கொண்டு மேலே எழும்புவது போல முழங்கிச் சிறந்து திசையெல்லாம் உலாவிப் பரந்தது; நிலமகளின் நெஞ்சு அஞ்சுமாறு இடைவிடாது இடித்து மிக்க நீரை மழையாகப் பொழிந்த்து.
மூதாய்= தம்பலப்பூச்சி / இந்திர கோபம்
                                            
முந்நீர் படைத்தல் காத்தல் அழித்தல்
வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்புஅறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து
நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து .....
                                   மாமூலனார், அகநா.127 : 3-10
கடலிடையே உள்ள குறை நிலத்தில் தம்முடன் மாறுபட்ட பகைவரைப் புறங்காட்டி ஓடச்செய்து, அவருடைய காவல் மரமாகிய  கடம்பினை வெட்டி , அதனாற் செய்த வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசினையுடைய சேரலாதன், தம் முன்னோரைப் போல இமயத்தில் வளைந்த விற்பொறியைப் பொறித்தான்; மீண்டு வந்து ஆம்பல் என்னும் எண்ணளவு தம் பகைவர் பணிந்துகொடுத்த பெருமைமிக்க நல்ல அணிகலன்களோடு, பொன்னாற் செய்த பாவையினையும் வயிரங்களையும் மரந்தை என்னும் ஊரில் உள்ள தன் மனைக்கண் முற்றத்திடமெல்லாம் நிறையும்படி கொண்டு வந்து குவித்தான்; அன்று அவ்விடத்து நிலம் தின்னும்படி கைவிட்டுப்போன அந்நிதியம் போன்ற பெரும் பொருளை ....... (மரந்தை – சேரனின் நகரம்- மாந்தை பாடமும் உள்ளது) முந்நீர் – கடல், மூன்று செய்கை- மண்ணைக் காத்தலும் படைத்தலும் அழித்தலும் என்பார் அடியார்க்குநல்லார், சிலம்பு17:31-யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீரும்,புறம் 9:10 விசேட உரை.முன்னீர்-நிலத்திற்கு முன்னாகிய நீரென்று உரைப்பாரும் உளர்.

மழை
................................................ முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் .....................
   மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார், அகநா. 174 : 5-8
நிரம்பிய கால்களில் படர்ந்திருக்கும் முல்லையின் முதிய கொடியானது தளிர்க்குமாறு, ஞாயிறு தோன்றும் கீழ்த்திசை வானத்தில் எழுந்த கடுங்குரலையுடைய மேகங்கள் மழையைப் பொழிந்து முழங்கும்பொழுதெல்லாம் நம் தலைவி .....
காலை வானம் – ஞாயிறு தோன்றும் கீழ்த்திசை வானம்.
கீழ்த்திசையில் மேகம்  திரண்டால் கடும் மழை பொழியுமா? ஆய்க.
பாறு=பருந்து




வலன் ஏர்பு - மேகநீர்முகந்து –மழை,குதிரைமரம்
 குணகடல் முகந்த கொள்ளை வானம்
பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு
                              -கபிலர் , அகநா. 278: 1 – 3
கீழ்த்திசைக் கடலிடத்து நீரைமுகந்துசுமந்துயானகள் அணிவகுத்து நின்றது போல் தோன்றி வலமாக எழுந்து சென்றன.

குதிரைமரம்ஆற்றில் நீரைத் தேக்குதற்குக் கால்களாய் நிறுத்தப்படும் மரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக