ஞாயிறு, 31 மே, 2015

நாலடியார் நன்மொழிகள்--பகுதி -1

நாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -1
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூல்கள் –கட்டுரையில் காண்க)
Naaladiyaar final
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்
                                                                                        2: 3, 4
செல்வம் யாரிடத்தும் நிலைத்து நிற்காது; வண்டிச் சக்கரத்தைப் போலச் சுற்றி வரும் தன்மை உடையது.
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க
                                                                                          4: 1, 2
செல்வங்கள் எதுவும் நிலைத்து நிற்கமாட்டா என்பதை உணர்ந்து  இயன்றவரை நல்வினைகள விரைந்து ஆற்றுக.

பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்
                                                                                  6: 3, 4
நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களேநல்வினையாற்ற உங்கள் பொருளைக் கொடுங்கள் ஏனெனில் நாளை தழீம் தழீம் என்ற ஓசையுடன் அடிக்கப்படும் சாப்பறை உங்களுக்கும் அடிக்கப்படும்.

வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
இழந்தான் என்று எண்ணப்படும்
                                                                                                   9: 3, 4
 இல்லார்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன் அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.

பனிபடு சோலைப் பயன் மரம் எல்லாம்
கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை
                                                                                        17: 1, 2
குளிர்ச்சி பொருந்திய சோலையில் உள்ள பலன் தரும் மரங்கள் எல்லாம் பழங்களை உதிர்த்து வீழ்ந்ததைப் போல  இளமைப் பருவமும் வீழும்.

மற்று அறிவாம் நல்வினை யாம் இளையாம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்
                                                                                            . 19: 1, 2
இளவயது உடையோராய் இருக்கிறோம் பிறகு செய்யலாம் என்று அறச் செயல்களைத் தள்ளிப் போடாதீர் ; கையில் பொருள் இருக்கும் பொழுதே அதனை ஒளித்து வைக்காமல் அறச் செயல்களைச் செய்யுங்கள்.

முக்காலைக் கொட்டினுள் மூடித் தீக் கொண்டு எழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து
                                                                                        24: 3, 4
மூன்றாம்முறை பறை அடிக்கும் பொழுது பிணத்தை மூடி நெருப்புச் சட்டியை எடுத்துக்கொண்டு செத்துப்போனாரைச் சாகப்போகும் மக்கள் தூக்கிக்கொண்டு போவர்.

புல்நுனி நீர்போல் நிலையாமை என்று எண்ணி
இன் இனியே செய்க அறவினை
                                                                                  29: 1, 2
 புல் நுனியின்மேல் படிந்த நீரைப்போல, நிலையாமை உடையது உடம்பு என்று எண்ணிஅறவினைகளை இப்பொழுதே ஆற்றுக.

உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
                                                                             . 37: 3, 4
 நிலையற்ற இந்த உடம்புக்கே உதவி செய்துகொண்டு வாழாமல்  இறந்தபின் செல்லும் மேலுலகில் இருந்து இன்பம் நுகர்வதற்கான செயல்களையே செய்தல் வேண்டும்.

முல்லை முகை முறுவல் முத்தென்று இவை பிதற்றும்
கல்லாப் புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
                                                                                                   45: 1, 2
அறிவற்றவர்களே, பெண்களின் பற்கள் முல்லை அரும்பு, முத்து என்று வருணித்துக் கூறுவர். மனத்தை மயக்கும் அவ்வருணனைகளைக் கேட்டு அறிவை இழந்து விடுவேனா ? இழந்துவிட மாட்டேன்.

விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் - ...
                                                                                              51: 1, 2
 விளக்கு ஏற்றியவுடன் இருள் அழிவதைப் போல, ஒருவன் செய்யும் தவத்தின் முன் பாவம் நிலைத்து நில்லாது ஒழியும்.

துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையர் - ...
                                                                                                              60: 1, 2
 அறிவில்லாதார், தம் வாழ்வில் துன்பமே மிகுதியாகத் தொடர்ந்து வருவதைக் கண்டும் நிலையான இன்பத்தை நல்கும்  துறவறத்தை நினைக்க மாட்டார்கள்; அழிந்து போகும் இன்பத்தையே விரும்புவர்.

ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து
                                                                                        63: 3, 4
பல நூல்களையும் ஆராய்ந்து அந்நூல்கள் நுவலும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்.

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - ...
                                                                            68: 1, 2
நீண்டகாலம் கழிந்தாலும் மனிதத் தன்மையற்றவர்களின் சினம் அழியாது வளர்ந்துகொண்டே இருக்கும்.

தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க -...
                       சமண முனிவர்கள், நாலடி. 80: 1, 2
தான் கெட்டுப் போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே; உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத்தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப் பெற்று உயிர் வாழாதே
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்
                                                                                      80: 3, 4
இந்த உலகம் முழுவதையும் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பொய் கலந்த சொற்களைப் பேசாதே.

அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா ...
                                                                                       82: 1, 2
பிறன் மனைவியை விரும்புவார்க்கு அறம், புகழ், நட்பு, பெருமை என்ற இந்நான்கும் சேராது.

நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க
படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்
                                                                                         96: 1, 2
பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள்  ஊரின் நடுவே மேடைசூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

இறப்பச் சிறிதென்னாது இல் என்னாது என்றும்
அறப் பயன் யார் மாட்டும் செய்க
                                                                                      99: 1, 2
நம் கையிலிருக்கும் பொருள்  மிகவும் குறைவானது என்று நினைக்காமல் ; இரப்போர்க்கு இல்லையென்னாது;  அறம் செய்வதால் பயன் உண்டு என்று கருதி உதவி வேண்டி வருவோர்க்கு உதவி செய்க.

வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றால்
                                                                                                   103: 1, 2
   செல்வத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்பாதார் யார் ? ஒருவரும் இல்லை ஆனால்  அவரவர் பழவினையால்  அவரவர்களுக்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

தாம் செய்த வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை ...
                                                                                               120: 1, 2
எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும்  இறந்தபின் தம்முடன் வருவது தாம் செய்த நல்வினை, தீவினைகளின் பயனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட
புல்லறிவாளர் வயிறு
                                                                                      121: 3, 4
அறிவுகெட்டவர்களின் வயிறு,  விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடாகும்.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் ...
                                                                                          125: 1, 2
பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறை போல ஒவ்வொருநாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.
                                                                               -----------  தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக