ஞாயிறு, 31 மே, 2015

நாலடியார் நன்மொழிகள் –– பகுதி -2

நாலடியார் நன்மொழிகள் –– பகுதி -2
சமணமுனிவர்கள்
சிறுவரையே ஆயினும் செய்த நன்று அல்லால்
உறு பயனோ இல்லை உயிர்க்கு
                                                                                  130: 3, 4
சிறிய அளவேயாயினும்  நாம் செய்த நல்லறத்தைத் தவிர நமது உயிருக்கு உறுதுணையாக வருவது வேறு ஒன்றும் இல்லை.

எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து
                                                                                           132: 3, 4
கல்வியைப் போல் அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறிய மாட்டோம்.

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்று அல்ல பிற
                                                                                                    134: 3, 4
ஒருவன் தன் மக்களுக்குச் சேர்த்துவைக்கும் பொருள் என்று சொல்லத் தகுந்தது கல்வி கற்றுக் கொடுத்தல் ஒன்றே ; வேறு எதுவும் இதற்கு இணையாகாது.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
                                                                                       135: 3, 4
 கல்வி எல்லையற்றது; கற்பவர்களின் நாட்கள் சிலவே.

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்
                                                                              139: 1, 2
கல்லாதவராயினும் கற்றவருடன் சேர்ந்து  பழகினால்  நாளும் நல்லறிவு வாய்க்கப்பெற்றுச் சிறந்து விளங்குவர்.

உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்
குடிப் பிறப்பாளர் தம் கொள்கையில் குன்றார்
                                                                                             141: 1, 2
ஆடைகள் கிழிந்து, உடல் தளர்ந்து வறுமையுற்றுத் துன்புற்றாலும் நற்குடியில் பிறந்தார் நல்லொழுக்கமாகிய தம் கொள்கையில் சிறிதும் குறையமாட்டார்.

எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்
                                                                                             150: 1, 2
நற்குடிப் பிறந்தார் எத்தகைய ஒரு பொருளும் இல்லாது வறுமை அடைந்த காலத்திலும் தன்னிடம் உதவி வேண்டி வந்தவர்க்குத் தளர்ச்சி வந்துற்ற போது உதவும்  ஊன்றுகோல் உதவி செய்வார்.

இசையும் எனினும் இசையாது எனினும்
வசை தீர எண்ணுவர் சான்றோர்
                                                                                      152: 1, 2
சான்றோர்தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை  அடக்கம்
                                                                         170: 1, 2
செருக்கு இல்லாமல் அடங்கியிருக்கும் சிறப்பே பெரியோர்க்குரிய பெருமையாகும். கல்வி, செல்வம், வீரம் இவற்றுள்ளே ஒன்றுக்கு உரியவர்க்குள்ள சிறந்த குணமாவது அடக்கமாகும்.

பிறப்பு இன்னாது என்று உணரும் பேர் அறிவினாரை
உறப் புணர்க அம்மா என் நெஞ்சு
                                                                                               173: 3, 4
நெஞ்சே ! இப்பிறப்புத் துன்பம் தருவது என்ற உண்மையை உணர்த்தும் சிறந்த அறிவுள்ள நல்லவர்களை நண்பர்களாகப் பெறுக.

குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவார்
குன்று அன்னார் கேண்மை கொளின்
                                                                                           176: 3, 4
பெருமை இல்லாதவர்கள்புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள்.

நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம்
குல நலத்தால் ஆகுவர் சான்றோர்
                                                                                          179: 1, 2
 நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப்போல்  தம்முடைய  இனத்தாரின் சிறப்பினால்  சான்றோர் ஒழுக்கமும் உயர்வும் உள்ளவராகத் திகழ்வர்.
                                                                        
மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் – அறிஞராய்
                                                                                       183: 1, 2
மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

பெருவரை நாட பெரியார்கண் தீமை
கருநரை சூடே போல் தோன்றும் ...

                                                                                                    186: 1, 2
பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டையுடைய பாண்டியனே ! சான்றோர்களிடத்து உண்டான குற்றம் பெரிய வெள்ளைக் காளையின் மேல் போடப்பட்ட சூடு போல் எல்லோருடைய பார்வையிலும் படும்.
                                                                                               
இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை ...
                                                                                          194: 1, 2
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.

உயர்குடி உள்பிறப்பின் என் ஆம் பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக் கடை
                                                                                       199: 3, 4
தன் பெயரைக் கல்லில் எழுதக் கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ் பெற மாட்டாதவன் உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாம் ? ஒரு பயனும் இல்லை என்பதாம். 

அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம் போல் நேர் ஒப்பத் தாங்கிப் பழுமரம் போல்
பல்லார் பயன் துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல் ஆண் மகற்குக் கடன்
                                                                                                         202
வெயில் காலத்தில் தன் அடியைச் சேர்ந்தவர்க்கெல்லாம் நிழலைத்தரும் மரத்தைப் போலத் தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்றி, ஊரின் நடுவே பழுத்திருக்கும் பழ மரம் போலப் பலரும் பயன்கொள்ளுமாறு தன்னை வருத்திப் பிறர் வாழ தான் வாழ்வது நல்ல ஆண் மகனுடைய கடமையாகும்.

உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
எக்கலத்தானும் இனிது
                                                                                          206: 3, 4
 தன்னை உயிரைப் போல நேசிக்கின்ற உறவினர் இடும்  உப்பில்லாத புல்லரிசிக் கூழ்  எந்தக் கலத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம்.

கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்தில் கரும்பு தின்று அற்றே ...
                                                  சமண முனிவர்கள், நாலடி. 211: 1, 2
நூல் பல் கற்று உண்மைப் பொருளைக் கண்டறிந்து ஒழுகும் சான்றோர்களுடன் கொள்ளும் நட்பு, கரும்பைக் குருத்திலிருந்து தின்பதைப்  போல வரவர இனிக்கும்.

கோட்டுப் பூப் போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்ட்தே வேட்ட்தாம் நட்பாட்சி ...
                                                                                           215: 1, 2
மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரும் மலரைப் போல  இறுதிவரையிலும் விருப்பத்துடன் தொடருவதே  நட்பின் சிறப்பாகும்.
              
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு
                                                                                                218: 3, 4
 வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச்சென்று அவர் நட்பைக் கொள்ளவேண்டும்.

இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று
                                                                                          219: 3, 4
ஒருவரை வெறுத்துஅவர் மனம் புண்படும்படி வசை மொழிகளைக் கூறுவதைவிட அவர்களைக் கொன்றுவிடுவது நன்றாம் ; ஒருவரிடத்தில் இல்லாத குணங்களை இருப்பதாகச் சொல்லிப் புகழ்வதைவிட அவரை நேரடியாக வைதலே நன்றாம்.

பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு
                                                                                            . 220: 3, 4
உயிரைப் போக்கும் பாம்போடாயினும் பழகிவிட்டுப் பின்பு பிரிதல் என்பது மனத்திற்குத் துன்பம் தருவதாகும்.

நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
                                                                                                 221: 1, 2
நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர்  நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
                                                                                   -------------------தொடரும்

                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக