அகநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 3
புனைவினை நல்
இல் தரு மணல் குவைஇப்
பொம்மல் ஓதி
எம் மகள் மணன் என
வதுவை
அயர்ந்தனர் நமரே ...
கயமனார், அகநா. 221 : 2 – 4
தலைவியே ! அரும்பினின்று உண்டாகிய கள்ளின்
தெளிவைப் பருகி, அழகு செய்யப்பட்ட நல்ல மனையிலே புது மணல் பரப்பிப் பொலிவுற்ற
கூந்தலையுடைய எம் மகளுக்கு மணம் என்று கூறி, நம் தாய் தந்தையர் திருமணத்திற்கு ஆவன
செய்தனர்.
அன்பும் மடனும்
சாயலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும்
கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு
ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி …
எயினந்தை மகனார் இளங்கீரனார், அகநா. 225 :1 – 4
நெஞ்சே
! அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனியசொல்லும்
ஒன்றுபட்டுள்ள கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க இன்று இவ்விடத்தே இருந்தோம். நாளை பிரிய நேருமோ
?( இவை தலைவனுக்கும் தலைவிக்கும் ஒத்திருக்க வேண்டிய குண நலன்கள்.)
செறுவோர்
செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து
உய்க்கும் ஆண்மையும்
இல்லிருந்து
அமைவோர்க்கு இல் ...
மதுரை ஈழத்துப் பூதந்தேவனார், அகநா. 231 : 1 – 3
தம் பகைவர்
செருக்கினை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு நேர்ந்தவிடத்து உதவி
செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி
இருப்போர்க்கு இல்லை.
காமம் கலந்த
காதல் உண்டு எனின்
நன்றுமன் அது
...
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், அகநா. 268 : 6, 7
காதல் மிகுந்த
காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும்.
திருந்து கோல்
ஆய்தொடி ஞெகிழின்
மருந்தும்
உண்டோ பிரிந்து உறை நாட்டே
காவிரிப்
பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், அகநா. 271 : 16, 17
தலைவ,
நின்பிரிவால் தலைவியின் அழகிய வளையல் நெகிழ்ந்து வீழின், அதனை மாற்றும் மருந்து நீ
பிரிந்து தங்கியிருக்கும் நாட்டில் உளதோ ?
முல்லை சான்ற
கற்பின்
மெல்லியல்
குறுமகள் உறைவின் ஊரே
இடைக்காடனார், அகநா. 274 : 13, 14
நறுமணம் மிக்க
முல்லை மலர் ஒத்த, கற்பிற் சிறந்த,
மென்மைத் தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர்.
இரந்தோர்க்கு
ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து
வெளிப்படாது ஆகி
வருந்துகதில்ல
யாய் ஓம்பிய நலனே
பரணர், அகநா. 276 : 13 – 15
என் தாய் பாதுகாத்து வளர்த்த என்
அழகானது பொருள்மேல் பற்று கொண்டு இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் சேர்த்தவன்
செல்வம் போல் வெளிப்படாது அழிவதாக.
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல
பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர்...
இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்,அகநா. 279:1-5
காம இன்பநுகர்ச்சியை விட்டு நீங்காத
நெஞ்சினால் பொருள் ஈட்டாது சோம்பி இருப்போர், நண்பரும் சுற்றத்தாரும்
துன்புறுதலையும் பகைவர் பெருமையுடன் வாழ்தலையும் கண்டபிறகும் அவர்களோடு ஓரிடத்தில்
வாழ்தலைப் பொறுத்திருப்பர்.
வல்லே வருக
வரைந்த நாள் என
நல் இறை
மெல்விரல் கூப்பி
இல்லுறை
கடவுட்கு ஓக்குதும் பலியே
தொல் கபிலர், அகநா. 282 : 16 – 18
தோழீ ! நம்
திருமணத்திற்குக் குறித்த நாள் விரைந்து வருவதாக என்று மனையில் இருக்கும்
தெய்வத்தைக் கை கூப்பி வணங்குவோமாக.
அறனும்
பொருளும் வழாமை நாடித்
தற்தகவு உடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே
முன்னியது முடித்தல்
அனைய பெரியோர்
ஒழுக்கம் ...
ஓரம்போகியார், அகநா. 286 : 10 – 13
இல்லறமும்
பொருளும் வழுவா வகையை ஆராய்ந்து; தனது
தகுதி உடைமையை உணர்ந்து; அதன் பின்னரே
தான் கருதியதை முடித்தல் நன்று; அறிவுடையோர் செயல் என்பது அத்தகையதே.
காதலர் செய்த
காதல்
நீடின்று
மறத்தல் கூடுமோ மற்றே
அதியன் விண்ணத்தனார்,
அகநா. 301 : 27, 28
தோழீ! தலைவர் என்
மீது கொண்ட காதலை எளிதில் மறத்தலும் இயலுமோ ?
அருள் இலாளர்
பொருள்வயின் அகல்
எவ்வம்
தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன்
உளனோ தோழி ...
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், அகநா. 305 : 9 – 11
தோழீ ! கருணை இல்லாத தலைவர் பொருள் ஈட்டும் பொருட்டுச்
சென்றுள்ளார். துன்பத்தைச் சுமந்து வருத்தமுற்ற நெஞ்சுடன் எங்ஙனம் ஆற்றியிருப்பேன்
நான்.
பழையன் ஓக்கிய
வேல் போல்
பிழையல கண்
அவள் நோக்கியோர் திறத்தே
பரணர், அகநா. 326 : 12, 13
போர் என்னும்
ஊருக்குத் தலைவனாகிய பழையன் என்பான் பகைவர் மீது செலுத்திய வேல் போல், அவளால் பார்க்கப்பெற்றார் மீது அவள் கண்கள் தைத்தல் தப்பா.
இன்பமும்
இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல்
அமையமும் இரவும் போல
வேறு வேறு இயல
ஆகி மாறு எதிர்ந்து
உள …
மருங்கூர்ப்
பாகைச் சாத்தன்பூதனார், அகநா. 327 : 1, 2
இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல்
பொழுதும் இராப்பொழுதும் போல வேறு வேறு தன்மையினவாகி மாறுபட்டு எதிர் நிற்பன.
அமிழ்தத்தன்ன கமழ்
தார் மார்பின்
வண்டு
இடைப்படா முயக்கமும்
தண்டாக்
காதலும் தலைநாள் போன்ம்
கபிலர்,அகநா. 332 : 13 - 15
தோழீ ! தலைவனின்அமிழ்தம்
போன்ற இனிய மாலை உடைய மார்பின் கண்ணே
வண்டு இடைப்படாத முயக்கமும் நீங்காத காதலும் முதல் நாள் துய்த்த இன்பம் போல
இன்றும் சிறந்து நிற்கின்றன.
இருள்படு
நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு
உடையராயினும் ஈதல்
பொருள்
இல்லோர்க்கு இயையாது ஆகுதல்
யானும் அறிவென் …
மதுரைத் தத்தங்கண்ணனார்,அகநா. 335 : 1 – 3
நெஞ்சே ! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையவராயினும்
கைப்பொருள் இல்லார்க்கு, ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும்
நன்கு அறிவேன்.
ஆள்வினைக்கு
எழுந்த அசைவில் உள்ளத்து
ஆண்மை வாங்கக்
காமம் தட்பக்
கவைபடு
நெஞ்சம் ...
நரைமுடி
நெட்டையர், அகநா. 339 : 6 – 8
தாளாண்மை பற்றி எழுந்த தளர்வில்லாத நெஞ்சில் உள்ள ஆண்மை
இழுக்கவும் காமம் பின்னே நின்று தடுக்கவும் இரண்டிற்கும் இடையே ஆற்ற இயலாது
தடுமாறும் நெஞ்சமே.
உயிர்
இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன
காதல்
சாதல் அன்ன
பிரிவு அரியோளே
நரைமுடி
நெட்டையர், அகநா. 339 : 12 – 14
உடலோடு உயிர் ஒன்றினால் போன்ற நட்பினையும் அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும்
காதலையும் உடைய தலைவிக்குச் சாதல் போலும் துன்பத்தைத் தரும் பிரிவு.
சிலை ஆய்ந்து
திரிதரும் நாடன்
நிலையா
நன்மொழி தேறிய நெஞ்சே
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், அகநா. 348 : 13, 14
வில்லை
ஆராய்ந்து எடுத்துக் கொண்டு திரியும் நாடனாகிய
தலைவனது உறுதியில்லாத இனிய சொல்லை உண்மையெனத் தெளிந்த நெஞ்சமே.
நல்லிசை
நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை
நிறீஇய உரைசால் பாண் மகன்
எண்ணுமுறை நிறுத்த
பண்ணின் உள்ளும்
புதுவது புனைந்த
திறத்தினும்
வதுவை நாளினும்
இனியனால் எமக்கே
அஞ்சியத்தை மகள்
நாகையார், அகநா. 352 : 13, 14
நல்ல இசைகளை வரையறை
செய்த இனிமை மிக்க நூலின், எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டிலும் பாணன்
புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும் மணம் புரிந்த நாளினும் தலைவன் இனியனாக உள்ளான்,
என்றாள் தலைவி.
நாளது செலவும்
மூப்பினது வரவும்
அரிது பெறு
சிறப்பின் காமத்து இயற்கையும்
இந்நிலை
அறியாயாயினும் ...
மதுரை
அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், அகநா. 353 : 4 – 6
நெஞ்சே,
நாட்கள் கழிதலும், முதுமை வந்தடைதலும் அரிதாகவாய்க்கப் பெற்ற காமத்தின்
தன்மையையும் நீ இப்போது அறியவில்லையாயினும் பின்னே வருந்துவாய்.
வார்முலை முற்றத்து
நூலிடை விலங்கினும்
கவவுப்
புலந்து உறையும் கழிபெரும் காமத்து
இன்புறு
நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...
எயினந்தை மகனார் இளங்கீரனார், அகநா. 361 : 5 – 7
நெஞ்சே ! தலைவியின்
மார்பில் தோய்ந்து முயங்கும் முயக்கத்தினை ஒரு நூல் இடையே
தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும்
நுகர்ச்சியைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை.
நசைதர
வந்தோர் இரந்தவை
இசைபடப்
பெய்தல் ஆற்றுவோரே
மாற்றோக்கத்து
காமக்கணி நப்பாலத்தனார், அகநா. 377 : 14, 15
பொருள் வேண்டி இரக்கும் இரவலர் பெற்ற பொருளைப் புகழ் பெற
அளிப்பாய் என வேண்டுவோரும் உளரே.
நீங்கா
வஞ்சினம் செய்து நத்துறந்தோர்
உள்ளார்
ஆயினும் உளனே ...
காவட்டனார், அகநா. 378 : 18, 19
தோழீ ! நின்னைப் பிரியமாட்டேன் என்று சூளுரைத்துப் பின்பு அவர் பிரிந்து சென்று, நம்மை நினையாராயினும் நான் இன்னும் இருக்கின்றேனே.
விரிதிரை
முந்நீர் மண்டிணி கிடக்கைப்
பரிதிஅம்
செல்வம் பொதுமையின்றி
நனவின்
இயன்றது ஆயினும் கங்குல்
கனவின்
அற்றதன் கழிவே ...
பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா. 379 : 6 – 9
விரிந்த அலைகளை உடைய மண்திணிந்த இவ்வுலகம்
முழுவதும் உருண்டோடிடும் செல்வமானது யாவர்க்கும் பொதுமையாக இல்லையாதலால்; அச்செல்வம் உண்மையாகவே கை கூடியதாயினும் அதன்போக்கு இரவில் தோன்றி மறையும் கனவைப் போன்றதாம்.
பிறர் உறு
விழுமம் நோப
தம் உறு
விழுமம் தமக்கோ தஞ்சம்
கபிலர், அகநா. 382 : 1, 2
நல்லோர், பிறர்
துன்பப்பட்டால் தமக்குத் தொடர்பு இல்லாதவரானாலும் அவர் துன்பத்தைத் துடைப்பர்; தமக்குத் துன்பம்
நேரின் அதைப் பெரிதாக எண்ணாமல் எளிதாகக் கொள்வர்.
இரப்போர் ஏந்து
கை நிறையப் புரப்போர்
புலம்பில்
உள்ளமொடு புதுவது தந்து உவக்கும்
அரும்பொருள்
வேட்டம் எண்ணி ...
நக்கீரனார், அகநா. 389 : 11 – 13
இரப்பவர்களது ஏந்தும் கை நிறைந்திட, ஈகையாளர்கள் வருத்தம் இல்லாத உள்ளத்துடன் விரைந்து வந்து புதிய பொருள்களைத் தந்து மகிழ்வதற்குரிய, அரிய பொருள் ஈட்டி வர எண்ணினேன்.
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக