வியாழன், 28 மே, 2015

ஆசாரக் கோவை – மணி மொழிகள்

ஆசாரக் கோவை – மணி மொழிகள்
                                                பெருவாயின் முள்ளியார்
தந்தையும் தாயும் தொழுது எழுக
                                                                               4 : 3
 காலையில் துயில் எழுந்தவுடன் தந்தையையும் தாயையும் தொழுதபின் கடமை ஆற்றுக.
                                                                                       
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறை வகையால் ஊண்
                                                                                           25
உணவு உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும் கசப்பான கறிகளை இறுதியிலும் ஏனைய கறிகளை இடையிலும் உண்க.
                                                                                        
படிறும் பயன் இலவும் பட்டி உரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத்தவர்
                                                                                           . 52
எக்காலத்தும் ஒழுக்கத்தினின்று தவறாத மனம் உடையோர்
 வஞ்சனைச் சொல்லையும் பயனற்ற சொல்லையும் நாவடக்கமில்லாத சொல்லையும் பழிச் சொல்லையும் புறங்கூறுதலையும்  சொல்லார்.
                                                                                                   
எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சியவர்
                                                                                               89
கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார் ; தம்மால் இகழப்பட்டனவற்றிற்கு வருந்தார் ;  தீராத துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்கார் உண்மையான அறிவுடையார்.
                                                                                               
தன் உடம்பு தாரம் அடைக்கலம் தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினைப் போல் போற்றிக் காத்து உய்க்க ...
                                                                                                               95 : 1 – 3
தன் உடம்பு, மனைவி, அடைக்கலமாக வைத்த பொருள், தானே முயன்று சேர்த்து வைத்த பொருள் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலப்  பாதுகாத்துக் கொள்க.
                                                                                                                   
                                                  முற்றும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக