மனவளக் கலை - மெளனம்
”வாரம் ஒரு நாள் இரண்டு மணி அல்லது
ஆறு மணி நேரம் மெளனமாயிருக்கப் பழகுங்கள் ஆத்மாவுக்கு அமையும் உணர்வுக்கு ஆக்கமும்
அளிக்கும் “ – கி.து. வாண்டையார். இன்பவாழ்வு. ப.73
மெளனம் ஓர் இனியமொழி அலைபாயும் மனம் அமைதியுற – அவ்வழி உன்னை நீ உணர
– உன்னுள் உன்னைக் காண – உன்னுள் உயிர் வளம் பெற – ஏகாந்த நிலை எய்தி – அமைதியால் ஆக்கம்
பெற்று இன்புற்று வாழ்தல் எளிதாகின்றது.
மெளனம் – உலக மக்களின் ஒரே மொழி
– தாய்மொழி . மனம் இருக்கும் மனிதனிடம் மாண்புறும் மொழி – தொல்பழங்காலத் தூய மொழி.அமைதியின்
ஆட்சிமொழி.
“ மெளனம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும்
அமைதி நல்கும் “
ஐயா அவர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை
மாலை மெளன விரதம் அனுஷ்டிப்பார்கள்.பல்லாண்டுக் கால அனுபவப் பாடம் உடலுக்கும் உள்ளத்திற்கும்
உலக அமைதிக்கும் உயிர்கள் இன்புற்றிருக்கவும் ஐயா அவர்களின் மெளன விரத பிரார்த்தனை
அருட்பிரகாச வள்ளலாரின் உள்ளத்தில் உதித்த எண்ணங்களாகத்தான் இருக்கும்.
“ நையாத வண்ணம் உயிர் காத்தல் வேண்டும்
“
உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல்
வேண்டும் “
’ எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல்
வேண்டும் “
“புரை சேரும் கொலை நெறியும் புலைநெறியும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து
உவத்தல் வேண்டும்”
வள்ளலார் வழிநின்று வாழும்
தகைமையால் ஐயா அவர்கள் போற்றி ஒழுகும் வாய்மை நிறைந்த தூய்மை நெறியை ஈண்டு ஓர்ந்து
உணரமுடிகிறது.
மெளனம் – கலக நாஸ்தி என்பார்கள்.ஐயா
அவர்களிடம் பெருமை பெறும் மெளனம் என்னும் இந்த அரிய கலையானது அற்புத ஆற்றல் வாய்ந்தது
என்பது அவர்களின் அனுபவ உண்மையாகும். ஐயா அவர்கள் மெளனம் என்னும் இந்த மனவளக்கலை குறித்து
பல்லாடுக் காலமாக எழுதியும் பேசியும் இயக்கியும் இளைஞர்களையும் முதியோர்களையும் படித்தவர்களையும்
பாமரர்களையும் ஈர்த்து வருகிறார்கள்.
ஐயா அவர்களின் சிந்தனையும் செயலும் மன்னுயிர் மகிழப்
புரிந்ததன்றோ ! கபிலர் கூறுமாறு
“ பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்ப பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்க எனக்
கொடுத்த “
பாரியின் கருணை உள்ளத்தைப் போன்று
ஐயா அவர்களின் அருட் தொண்டும் கருணை மறமும் எவருடைய் பாராட்டையும் புகழ்ச்சியையும்
எதிர்பார்த்து இயன்றவையல்ல.
மெளனம் – மகத்துவம் நிறைந்த சொல்
“ மெளனம் பேச்சின் தந்தை என்று அழைக்கப்படுகிறது.
மெளனம் உலகின் மிகப்பெரிய மொழி அதைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறுங்கள். கையாளுவதில்
திறமை பெறுங்கள் “ –என்பார் டேல் கார்னகி.
இப்பொழுது புரிகிறது ஐயா அவர்களை
ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகம் எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டது என்று உலகின் மிகப்பெரிய
மொழியைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றமையைப் பாராட்டி ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகம் அரிய
பெரிய விருது வழங்கியது.
மெளனம் – ஆற்றலை வளர்க்கும்
“ பேசாதீர்கள் மன்ப்பூர்வமாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்….
பேசாதீர்கள்—மெளனத்தில் உங்கள் எண்ணம் முதிர்ச்சி அடையும்வரை பேசாதீர்கள். அமைதியிலிருந்துதான்
உங்கள் ஆற்றல் பிறக்கிறது . பேச்சு – வெள்ளி…அமைதி – பொன்.பேச்சு மனிதத் தன்மை உள்ளது…..அமைதி
தெய்வீகமானது “ என்கிறார்-கார்லைல்.
இக்கூற்று ஐயா அவர்களின் மெளன ஆற்றலுக்கு
விளக்கமாக அமைகிறது.ஐயா அவர்கள் சாதி- மத-இனம் கடந்து மக்களை நன்னெறிப்படுத்தி புதிய
உலகம் (–நோயற்ற)படைக்க முனைந்து செயலாற்றி
வருகிறார்கள்.
“ இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு
தன்சொலால்
தான் கண்டனைத்திவ் வுலகு - குறள்.387
இனிய சொற்களுடன் கொடுத்துக் காக்கவல்ல அரசனுக்கு
இவ்வுலகம் தன் புகழோடு தான் நினைத்தபடி அமைவதாகும் என்கிறது வள்ளுவம்.
டெல்டா வேந்தரின் முயற்சி திருவினையாகும் – வள்ளுவனாரின்
வாக்கு மெய்யாகும்மே. – களப்பாள் குமரன் (யான்) எழுதிய “ சத்திய ஜீவன் “
என்னும் நூலிலிருந்து பக். 150-152)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக