புறநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 4
ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கழைதின்யானையார், புறநா. 204 :
1, 2
இரப்பது இழிவானது; இரப்பவர்க்கு இல்லை எனக் கூறுவது அதைவிட இழிவானது.
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
கழைதின்யானையார், புறநா. 204 :
3, 4
பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கொடுத்தல் உயர்ந்தது; வேண்டாம் என மறுத்துக் கூறுதல் அதைவிட உயர்ந்தது.
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே
பெருந்தலைச் சாத்தனார், புறநா.205
: 1, 2
நிறைந்த
செல்வத்தை உடைய மூவேந்தராயினும் எம்மிடத்து அன்பு காட்டாது வழங்கும் பரிசிலை விரும்ப மாட்டோம்.
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே …
ஒளவையார்,புறநா. 206 : 8, 9
அறிவும் புகழும் உடையோர் இறந்தார் எனின் உலகம் வெற்றிடமாகும் அன்றோ.
பெரிதே உலகம் பேணுநர் பலரே
பெருஞ்சித்திரனார்,புறநா. 207 :
7
உலகம் மிகப் பெரிது; அதில் எம்மை விரும்பிப் போற்றுவோர் பலர் உள்ளனர்.
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் …
பெருஞ்சித்திரனார்,புறநா.208 :
6, 7
என்னைக்
காணாது ; என் புலமை அறியாது கொடுத்த
இப்பரிசிலைப் பெறுவதற்கு
நான் பொருள் பெறும் பரிசிலன் அல்லன்.
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோயிலை ஆகுமதி பெரும …
பெருந்தலைச் சாத்தனார், புறநா.209 : 13, 14
நீ பரிசில் கொடுக்கவில்லையானாலும் அதற்காக வருந்த மாட்டேன் ; நேயின்றி வாழ்வாயாக.
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
பெருங்குன்றூர் கிழார்,புறநா.210 : 1- 4
தலைவனே ! மக்களைக்
காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும்
ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே
புல்லாற்றூர் எயிற்றியனார், புறநா. 213 : 22-
24
வேந்தே ! வானோர் உறைகின்ற உயர்ந்த உலகத்தின்கண் உறைபவர் விரைந்து விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளுமாறு
நீ என்றும் நன்றே செய்தல் வேண்டும்.
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே
புல்லாற்றூர் எயிற்றியனார், புறநா. 214 :12,
13
நல்வினைஆற்றி இமய மலையின் ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்தி, பழியற்ற உடலோடு இறத்தல் சிறந்தது.
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே
கோப்பெருஞ் சோழன், புறநா. 215 : 7-9
பிசிரோன்.(பிசிராந்தையார்) என் உயிர் காக்கும் தோழன்,
அவன் எம்மிடத்தில் செல்வம் உள்ளபோது வாராமல் இருந்தாலும் யாம் துன்புறுங்
காலத்தே கட்டாயம் வருவான்.
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே
பொத்தியார், புறநா. 221 : 11-13
புலவர்களே! நம்மைப் பாதுகாத்த சோழன், அகன்ற இடத்தை உடைய இவ்வுலகில்
துன்பம் சூழ, நல்ல புகழ் மாலையைச் சூடி நடப்பட்ட கல்லாயினனே.
இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
ஒளவையார்,புறநா.232 : 1, 2
அதியமான் இல்லாமல் யான்
வாழும் நாள்கள் பயனற்றவை ஆகையால் காலையும் மாலையும் இல்லாமல் போகட்டும்.
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே
கபிலர், புறநா.
236 : 10-12
பாரியே ! இப்பிறப்பின் கண் நீயும் நானும்
நட்புடன் இன்புற்றிருந்தவாறு போல
மறுபிறப்பிலும் இடைவிடாது, கண் முன்னே தோன்றும் நின் காட்சியோடு கூடி
வாழ்வதை உயர்ந்த ஊழ் கூட்டுவதாகுக.
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
நச்சி இருந்த நசை பழுதாக
பெருஞ்சித்திரனார், புறநா.237 : 4 - 6
வெளிமான், பொய் சொல்லி அறியாத அறிவுடையவன்; அவன் செவியில்
நல்லவர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளந்தது என நினைத்தேன் ஆனால், அவன்
இறந்த பின்பு யான் பரிசில் பெறக் கருதிய என் விருப்பம் பயனற்றதாயிற்று.
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
குடவாயிற் கீரத்தனார்,
புறநா. 242 :5, 6
வலிய வேலை உடைய சாத்தன் இறந்துபட்டான்; சாத்தன் இல்லாத ஒல்லையூர் நாட்டில் முல்லை மலரே
நீயும் பூத்தனையோ ?
நெடு நீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டினார்,
புறநா.243 : 9 -11
ஆழமான நெடிய
நீரை உடைய மடுவின் கண், துடும் எனப் பாய்ந்து மூழ்கி, மணலை அள்ளிக் காட்டிய
அறியாப் பருவத்து இளமை இன்று எங்கு சென்றதோ?
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே
கோட்டம்பலத்துத் துஞ்சிய
மாக்கோதை, புறநா. 245 : 6, 7
என் மனைவி இறந்து மேலுலகம்
போனாள்; நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேனே, என்ன கொடுமை இது ?
குடப் பால் சில்லுறை போலப்
படைக்கு நோயெல்லாம் தான் ஆயினனே
மதுரைப் பூதன் இளநாகனார், புறநா. 276 : 5, 6
குடம் நிறைந்த பாலின்கண் தெளித்த சிலவாகிய பிரை, பால்
முழுதும் கலங்கிக் கெடுதற்குக் காரணமாவதைப் போல, பெரிய பகைவர் படைத்திரள் முற்றும்
கெட்டு அழிய அவன் ஒருவனே காரணமாயினன்.
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே
ஒக்கூர் மாசாத்தியார், புறநா. 279 : 10, 11
ஒருமகன் அல்லது வேறு துணையின்றி இருக்கும் மறக்குடி மகள்,
அவனையும் போர்க்களம் நோக்கிப் புறப்படு என விடுத்தனளே.
ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
பொன்முடியார், புறநா. 312 : 1, 2
மகனைப் பெற்று, வளர்த்து நாட்டிற்கு நல்குதல் என் தலையாய கடமை; அவனை அறிவாலும்
ஆண்மையாலும் மேன்மையுறச்செய்தல் தந்தையின் கடமையாகும்.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
பொன்முடியார்,
புறநா. 312 : 5,6
ஒளிரும் வாள் படையை உடைய அரிய போரில்,பகைவர்களைத் தோற்றோடச்செய்து, அவர்களுடைய
யானைப் படையை அழித்து வென்றுவரல் காளை போன்ற வீரனுக்குக் கடைமையாகும்.
மனைக்கு விளக்கு ஆகிய வாள் நுதல் கணவன்
முனைக்கு வரம்பு ஆகிய வெல்வேல் நெடுந்தகை
ஐயூர் முடவனார், புறநா. 314 :
1,2
ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவளோ இல்லத்திற்கு விளக்காகத் திகழ்ந்து இல்லறத்தை
நல்லறமாக்குபவள், அவள் கணவனோ வெற்றியைத் தரும் வேல் ஏந்திப் பகைவர் படையெனும் வெள்ளத்தைக்
கற்சிறை போல் ஒருவனாய் நின்று தடுத்து நிறுத்தியவன்.
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் …
மதுரைக்
கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், புறநா. 316 : 5,6
நேற்று, தன்னை நாடி வந்த விருந்தினர்களைப் பேணுவதற்காகத்
தன்னுடைய பழைய வாளை ஈடாக வைத்தான் ; இன்று வந்துள்ள விருந்தினரை
பேணுவதற்காகச் சிறிய யாழினைப் பணயம் வைத்துள்ளான்.
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன
……………..புறநா.328 : 3,4
புன்செய் நிலங்களில்விளைந்த வரகும் தினையுமாகிய உணவுப் பொருள்கள் யாவும் பசியால்
வருந்திவரும் இரவலர்களுக்கு வழங்கியமையால் தீர்ந்து போயின.
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
அரிசில்கிழார்,புறநா. 342 : 5,6
திருமகளாலும் விரும்பத்தக்க இயல்பினையுடைய இவளுடைய அழகு போர் வீரர்க்கன்றிப்
பிறரால் அடைதற்கு உரியதன்று.
அற வினை அன்றே விழுத்துணை …
பிரமனார்,புறநா. 357 : 6
அவரவர் ஆற்றும் நற்செயல்களே உயர்ந்த வீட்டுலகை அடைதற்குத் துணைபுரியும்.
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே
வான்மீகியார்,புறநா. 358 : 6,7
தன்பால் பற்றுவிட்டோரைத் திருமகள் நீங்காள்; திருமகளால் விடப்பட்டோர் இல்லறப் பற்றுவிடாதோரே.
வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
காவிட்டனார்,புறநா. 359 : 10
இவ்வுலகில் ஒருவன் செய்யும் பழியும் நிலைபெறும் ; புகழும் நிலைபெறும்.
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கு நீ எய்திய புகழே
காவிட்டனார்,புறநா. 359 : 17,18
நீ, மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் நின் ஈகையால் எய்திய புகழ் இவ்வுலகில்
நெடிது நிலைத்து நிற்கும்.
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு மன்னினரே நாடு கொண்டோரும்
காவிட்டனார்,புறநா. 359 :
7,8
பெரிய நாடுகளை வென்ற முடிமன்னர்களும்
முடிவில் சுடுகாட்டுத் தீயின்கண் சென்றடைந்தனரே.
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந் நீ முன்னிய வினையே
ஐயாதிச் சிறுவெண்டேரையார், புறநா.363 : 16,17
இறக்கும் காலம் வருவதற்கு முன்னே, நீ செய்யக் கருதிய நல்வினையைச் செய்வாயாக.
ஒரு தாமாகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனர்
கோதமனார், புறநா. 366 : 4,5
ஒப்பற்ற ஒருவராக விளங்கிய பெருமை
உடையோரும் , உலகில் தம் புகழை நிலைத்து நிற்கச் செய்து தாம் மாண்டு போயினரே.
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை
ஒளவையார்,புறநா. 367 : 11,12
இந்நிலவுலகில் வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட காலம் முழுதும் குறைவற
வாழ்தல் வேண்டும்; வாழும்பொழுது நல்வினை
புரிந்து வாழ வேண்டும். இறக்கும்பொழுது நல்வினையே துணையாவது
அன்றிப் பிரிதொன்றும் துணையாவதில்லை.
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடுஇன்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே
ஏணிச்சேரி முடமோசியார், புறநா.
375 : 19 - 21
பலவாறு எடுத்துக் கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சிஇல்லாத, பெருமை
இல்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.
கனவில் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவில் நல்கியோன் நசைசால் தோன்றல்
உலோச்சனார்,
புறநா. 377 : 19, 20
யான் இனி வறுமையுற்று வருந்தாமல் செல்வ நிலையிலேயே இருக்க, கனவில் கண்டது போல் நனவில் எனக்குச்
செல்வங்களை அள்ளித்தந்தான் அன்பு நிறைந்த எம் தலைவன் பெருநற்கிள்ளி.
துப்பு எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்
கருவூர்க் கதப்பிள்ளை, புறநா.
380 : 10,11
எம் தலைவன் நாஞ்சில் வள்ளுவன்,
வலிமைகொண்டு போர் செய்யவரும் பகைவர்களுக்கு நினைவுக்கு எட்டாத தொலைவில் இருப்பான்
; நட்புகொண்டு அன்பால் அடைந்தவர்க்கு அவரது உள்ளங்கை போல் நெருங்கி இருப்பான்.
ஈத்தோன் எந்தை
இசை தனதாக
கோவூர் கிழார், புறநா. 386 : 9
கிள்ளிவளவன், உலகில் நிலைபெறும் புகழ் அனைத்தும் தனக்கே உரியது ஆகுமாறு புலவர்களுக்கு வாரி வழங்கினான்.
உள் இலோர்க்கு வலியாகுவன்
கேள் இலோர்க்குக் கேளாகுவன்
மாங்குடி கிழார், புறநா. 396 : 10,11
வாட்டாற்று எழினியாதன், ஊக்கம் இல்லாதார்க்கு உரமாகித் துணை செய்வான்; சுற்றம்
இல்லாதார்க்கு உறவாகி மகிழ்ச்சி
அளிப்பான்.
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ
கோவூர் கிழார், புறநா.400 :16,17
நலங்கிள்ளி, தன்னை வருத்தக் கருதும் பகையைப் போக்குவதோடு, தன்னைச்
சார்ந்தோரின் பசியாகிய பகையையும் போக்குவதில் வல்லவன்.
the end
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக