புறநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 3
எத்துணை
ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை
நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை
நோக்கின்று அவன் கை வண்மையே
பரணர்,புறநா.141 : 13-15
எவ்வளவாயினும் கொடுத்தல் நன்று என்று அவன் அளிப்பது மறுமைப்
பயன் நோக்கியது அன்று. அவனது வள்ளல் தன்மை பிறரது வறுமைத் துன்பத்தைப் போக்குவதை
மட்டும் நோக்கியது.
அரசர் உழையராகவும் புரை தபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் …
மோசிகீரனார், புறநா. 154: 4, 5
பெரும் செல்வம்
உடைய வேந்தர் அண்மையில் இருப்பினும் அவரிடத்து வழங்கும் குணம் இல்லையேல் அச்செல்வத்தால் பயனொன்றும் இல்லை என்று கருதிப் புலவர்கள், சேய்மையில் உள்ள கொடை வள்ளலை நாடியே செல்வர்.
இரவலர்
உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர்
உண்மையும் காண் ...
பெருஞ்சித்திரனார், புறநா.162 : 3,4
இரப்போர் இருத்தலும் உண்மை; இரப்போர்க்குக் கொடுப்போர் இருப்பதும் உண்மை.
இன்னோர்க்கு
என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு
வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும்
கொடுமதி மனை கிழவோயே
பெருஞ்சித்திரனார், புறநா.163 : 5-7
” குமணன்
எமக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது, என்னையும் கேட்காது, நாம்
மட்டும் வளமுடன் வாழ வேண்டும் என்று பாதுகாத்து வைத்துக்கொள்ள நினையாது, நீயும் எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.
வாள் தந்தனனே
தலை எனக்கு ஈய
தன்னின்
சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
பெருந்தலைச்
சாத்தனார், புறநா.165 : 12,13
பாடுநர்க்கு
மிகுதியாகக் கொடுக்கும் குமணன் காட்டில் இருந்த பொழுது அவனை யான் பாடிநின்றேன், கொடுப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில் பரிசிலன் வாடிச் செல்லுதல் ‘ என் நாட்டை
இழந்ததைவிட மிகவும் கொடுமையானது ‘ என நினைந்தவன் காட்டில் தருவதற்குத்
தன்னைக் காட்டிலும் சிறந்த பொருள் வேறு
ஒன்றும் இல்லாமையால், தன் தலையை எனக்குத் தரும் பொருட்டு வாளைத் தந்தனன்.
மன்னா உலகத்து
மன்னுதல் குறித்தோர்
தம் புகழ்
நிறீஇத் தம் மாய்ந்தனரே
பெருந்தலைச் சாத்தனார், புறநா.165 : 1,2
நிலையில்லாத
இவ்வுலகத்தில் நிலைபெற
விரும்பியோர், தம் புகழை நிலை நிறுத்தித்
தாம் இறந்தனரே.
ஈயா மன்னர்
நாண
வீயாது பரந்த நின் வசைஇல் வான்
புகழ்
கருவூர்க் கதப்பிள்ளைச்
சாத்தனார்,புறநா. 168 : 21,22
இரவலர்க்கு ஈயாத மன்னர் நாண, பரிசிலர் பலரும் போற்றும் குற்றமற்ற நின்புகழ் இவ்வுகில் பரந்து நிலைபெறுவதாக.
ஈவோர் அரிய இவ்வுலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,புறநா.171 : 14,15
கொடுப்போர் அரிதாகிய இவ்வுலகத்தில் வறுமையுற்றோர் இனிது உயிர்
வாழ அவன் ( பிட்டங்கொற்றன் ) திருவடிகள்
என்றும் நிலைபெற்று வாழ்வதாக.
பசிப் பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே
சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளிவளவன்,புறநா.173 : 11,12
பசி நோய் தீர்க்கும் மருத்துவனாகிய சிறுகுடி கிழான் பண்ணனின்
இல்லம் அருகிலேயா தொலைவிலேயா ? என்று எங்களுக்குத்
தெளியச் சொல்லுங்கள்.
ஈண்டு செய் நல்வினை ஆண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
மாறோகத்து நப்பசலையார்,புறநா.174 : 19, 20
இவ்வுலகத்தில் செய்த நல் வினையின் பயனை உயர்ந்தோர்
உலகத்துச் ( துறக்கம்) சென்று நுகரும் பொருட்டுப் போயினன்.
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் …
கள்ளில் ஆத்திரையனார்,புறநா.175
: 3-5
ஆதனுங்க ! நின்னை யான் மறவேன் ; நின்னை யான் மறக்கும்
காலமாவது, என் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் காலத்தில்தான். என்னை யான் மறக்கும் காலம்
உண்டாயின் அப்பொழுது நின்னை மறப்பேன் அல்லது நின்னை மறவேன்.
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே
கள்ளில்
ஆத்திரையனார், புறநா.175 : 1, 2
ஆதனுங்க ! என் நெஞ்சைத் திறப்போர் ஆங்கு நின்னைக் காண்பர்.
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்ம் என் இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஆவூர் மூலங்கிழார், புறநா.178 :
2-4
இடுமணல் மிக்க
முற்றத்தே சான்றோர் பலர் வருவர் அவ்வேளையில் அவர் உண்ணாராயினும் தன்னுடனே
சார்த்திச் சூள் உரைத்து ” உண்மின் “
என்று அவர்களை வேண்டிக்கொள்ளும் பெரும் புகழாளன் சாத்தான்.
படை வேண்டுவழி வாள் உதவியும்
வினை வேண்டுவழி அறிவு உதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
வடநெடுந்தத்தனார், புறநா. 179 :
6-8
நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டியவிடத்து
வாள் படை நல்கினான். அரசியலுக்கேற்ற வினைசூழ்ச்சி
வேண்டியவிடத்து ஆன்ற அறிவுரையும் வழங்கினான். இவ்வாறு அவன் வேண்டியவற்றை வேண்டியவாறே தர வல்லவன்.
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே
கோனாட்டு எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார், புறநா.180 : 1, 2
ஈர்ந்தூர் கிழான், நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வ வளம் உடையவன் அல்லன்; இரந்தோர்க்கு இல்லையென மறுக்கும் சிறுமையும் உடையவன் அல்லன்.
உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே …
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநா.182 :
1-3
இந்திரர்க்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனை இனிது என்று தனித்து உண்ணுவோர்
இலர். அத்தகையோர் இருப்பதாலன்றோ இவ்வுலகம் இருக்கின்றது.
-
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் …
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,
புறநா.182 : 5, 6
புகழ் என்றால் தம் உயிரையும் கொடுப்பர்; பழி என்றால் அதனால் உலகம் முழுதும் ஒருங்கே கிடைப்பினும் கொள்ளார்.
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநா.182
: 8, 9
தாம் வாழ முயலாது பிறர் வாழ உழைக்கும் சான்றோர் பலர் இருப்பதாலன்றோ இவ்வுலகம் இருக்கின்றது.
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், புறநா. 183 : 1, 2
தன் ஆசிரியருக்குத்
துன்பம் வந்தவிடத்து அதைப் போக்க உதவிசெய்தும் அவர்க்குப் பெரும் பொருள்
கொடுத்தும் ஆசிரியரைப் போற்றி வழிபட்டும் கல்வி கற்பது நன்மை பயக்கும்.
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்,
புறநா. 183 : 3, 4
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவருள்ளும் அவரவர் கல்விச் சிறப்பின்
காரணமாகத் தாயும் அன்பு காட்டுவதில் மனம் வேறுபடுவாள். மூத்தோன்
வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
பாண்டியன்
ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், புறநா. 183 : 5, 7
ஒரு குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழையாது, அவருள் அறிவுடையோனை வருக என்று அழைத்து, அவன் அறிவுரைப்படியே அரசனும் நடப்பான்.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பாண்டியன் ஆரியப்படைகடந்த
நெடுஞ்செழியன், புறநா. 183 : 8 – 10
கீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள் கீழ்க்குலத் துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை
மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வி என்றும் சிறப்புடையது.
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
பிசிராந்தையார்,புறநா. 184 :
5,6
அறிவுடைய
அரசன் தாம் கொள்ளும் வரியை மக்களின் நிலையறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்
அவன் நாடு கோடிப் பொருளினை ஈட்டிக் கொடுத்துச் செழிப்படையும்.
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே
பிசிராந்தையார்,புறநா. 184 : 9-11
அரசன்,
குடிமக்களை வருத்தி மிகுதியான வரி வாங்குவானாயின் யானை புகுந்த நிலம் போல நாடு
அழிய, குடிமக்கள் வருந்த, அரசனும் கெடுவான்.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
மோசிகீரனார்,புறநா.186 : 1, 2
அரசனே உலகிற்கு உயிராவான்; மக்கள் உடலாவர்.உயிர், உடலுக்கு
வரும் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு அதனைப் பாதுகாப்பது போன்று அரசன் உலகைக்
காப்பதால் இவ்வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று.
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
ஒளவையார்,புறநா.187 : 3, 4
நிலமே ! ஆடவர் எவ்விடத்து
நல்லவராக விளங்குகின்றனரோ அவ்விடத்து நீயும் நன்மை தருவாய், நீ வாழ்வாயாக.
(வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்தது அன்று; அவ்வந் நிலத்து வாழ்கின்ற ஆடவரைப் பொறுத்ததே.)
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழு நாளே
பாண்டியன்
அறிவுடைநம்பி, புறநா.188 : 6, 7
மழலை இன்பம் தந்து அறிவை மயக்கும்
புதல்வரைப் பெறாதவர்க்குத் தாம் உயிர் வாழும்
நாளில் இன்பமாகிய பயன் இல்லை. அவ் வாழ்க்கை வெறுமை உடையதே.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார்,புறநா. 189 : 7, 8
பெற்ற
செல்வத்தால் பெறும் பயனாவது பிறர்க்குக் கொடுத்தல் ஆகும். அதனை விடுத்துத் தாமே துய்ப்போம்
என்று கருதினால் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றின் இம்மைப் பயன்கள் கிடைக்காது வருந்த நேரிடும்.
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
பிசிராந்தையரர், புறநா.191 : 6,7
கல்வி, கேள்வி, புலனடக்கம்
யாவும் சிறந்து விளங்கும் சான்றோர் பலர் வாழும் ஊரே யான் வாழும் ஊர்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எவ்வூரும் எம் ஊரே ; எல்லா மக்களும் எம் உறவினரே.
கணியன்
பூங்குன்றனார்,புறநா. 192 : 1
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
கணியன்
பூங்குன்றனார்,புறநா. 192 : 2, 3
நமக்கு நன்மையும் தீமையும்
பிறரால் வருவதில்லை. துன்பம் நேர்தலும் அது தீர்தலும்கூட நம்மால்
விளைவதே.
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே
கணியன்
பூங்குன்றனார்,புறநா. 192 : 4-6
சாதலும் புதுதில்லை ; அஃது உலகத்து இயற்கை. வாழ்தலை இனிமை என்று மகிழ்ந்ததும்
இல்லை; வெறுப்பு வந்தவிடத்துத் துன்பமானது என்று ஒதுக்கியதும்
இல்லை.
நீர்வழிப்படூஉம் புணை போல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ...
கணியன்
பூங்குன்றனார்,புறநா. 192 : 9-11
ஆற்று
நீரின் வழியே செல்லும் தெப்பம் போல வாழ்க்கையும் ஊழின் வழியே செல்லும் என்பதைச்
சான்றோர் கூற்றால் தெரிந்து கொண்டோம்.
ஓடி உய்தலும் கூடும் மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே
ஓரேருழவர்,புறநா. 193 : 3, 4
யானும் துறவு மேற்கொண்டு ஓடிப் பிழைக்கவும் கூடும் ஆனால், சுற்றத்தாரோடு கூடி வாழும் இல்லற வாழ்க்கை அதன்பால் செல்லவிடாமல்
கால்களைக் கட்டிப்போட்டு விடுகின்றது.
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே
பக்குடுக்கை நன்கணியார், புறநா.194 : 6,7
இவ்வுலக வாழ்க்கைத் துன்பம் நிறைந்தது; அதன்
இயல்பு உணர்ந்து இனிமை காண விழைக.
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது …
நரிவெரூஉத் தலையார், புறநா.195 : 6-8
நன்மைகள் செய்ய இயலாவிட்டாலும்
தீமைகள் செய்யாதிருப்பீராக அதுவே, எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் செயலாகும்.
மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
எறிச்சிலூர் மாடலன் மதுரைக்
குமரனார்,புறநா.197 : 15, 16
எமக்கு
மிகப்பெரிய துன்பம் வந்தாலும் அதனைப் போக்கிக்கொள்ளச் சிறிதும் அறிவில்லாதவருடைய
செல்வம் பயன் படாமையின் அதனை நினைத்துப்பார்க்க மாட்டோம்.
நல்லறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே
எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார்,புறநா.197 : 17, 18
நல்லறிவு உடையவர் மிக்க வறுமையுற்றார் ஆயினும்
அவ்வறுமை பெருமைக்கு உரியது ஆதலின் அதனை யாம் மகிழ்ந்து மிகவும் போற்றுவோம்.
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை..........
பெருந்தகையே ! நின் புதல்வர் பெறும் பிள்ளைகளைக் காணும்
தோறும் மகிழ்ந்து நீயும் விரும்பிய செல்வத்துடனே புகழும் இனிதாக விளங்க
நெடுங்காலம் வாழ்வாயாக.
புரவு எதிர்கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே
பெரும்பதுமனார்,புறநா. 199 : 5-7
இரவலரைக்
காத்தற் பொருட்டு அவரை எதிர் கொள்ளும் பெருஞ் செய்கை ஆண் மக்களது செல்வமாகும் இரப்போர் வறுமை
அவ்வாண்மக்களுடைய வறுமையாகும்.
( தம்மைப் பேணும் புரவலரைச்
சூழ்ந்திருந்து அவர் செல்வத்தைத் தம் செல்வமாகக் கருதி உண்டலும் அவரது வறுமையைத்
தம் வறுமையாகக் கருதுதலும் இரவலர்க்கு இயல்பு.)
நாளன்று போகி புள் இடை தட்ப
பதனன்று புக்கு திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் …
……………………………………………..
இவரே பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த
கபிலர்,புறநா. 200 : 9 - 11
பூவைத்
தலையில் அலங்கரித்தாற் போன்று பூத்துக் குலுங்கிய கொடிமுல்லை, நாக்குத் தழும்பேறப் பாடதாயினும் ஒலிக்கும் மணியுடைய நெடுந்தேரைத் கொள்க
எனக் கொடுத்தவன் பாரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக