வியாழன், 14 மே, 2015

மன வளக் கலை - தியானம்


மன வளக் கலை  - தியானம்
தியானம் மனத்திற்குத் தரும் அன்பு
                                        கி.து. வாண்டையார்- இன்பவாழ்வு
இஃது ஐயா அவர்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உரம் தரும் மந்திரமாக அறிவுறுத்துவார்கள்.
                “ தியானம் -  இதற்குத் தமிழில் உள்குதல் என்று பெயர். அதாவது உள்ளுக்குள் எண்ணம் கூர்ந்துகொண்டே போவது என்று சொல்வர். முதலில் யோகம் இருப்பவர்கள் இயமம் நியமம் ஆதனம் பிரணாயாமம் என்பதில் ஈடுபடுவதெல்லாம் துணக்கருவிகள். அதன்பிறகு வெளியில் அலைபாயும் எண்ணங்களை விலக்குதல் வேண்டும். இதனைப் பிரத்தியாகாரம் என்பர். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் ஏதோ ஒன்றில் எண்ணத்தை நிறுத்துதல் வேண்டும். அதனைத் தாரணை என்பர். அதன்பின் நின்றதில் மூழ்க வேண்டும் – அதுதான் தியானம்.” ( மின்னலார் – தெய்வமுரசு                                        
தியான மண்டபம்
               பூண்டிக் கல்லூரிக் கல்வித் திருக்கோயிலில் கலைமகள் உறையும் கருவறை நுழையும் முன்னே கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தியான மண்டபம். அம்மண்டபம் கற்போரும் கற்பிப்போரும் மனமாசு அகற்றித் தூய்மை பெற்று நுழைவீர் என்று உணர்த்துகிறது.மனத் தூய்மை இன்றேல் மன்னுயிர் வாழ்தல் இன்று என்பதறிந்து ஐயா அவர்கள் அகத்தெழுந்த ஆற்றல் வெளிப்பாடே தியான மண்டபம்.
                     மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்றார் வள்ளுவர். அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இவை நான்கையும் ஒழித்து நடப்பதே அறம் என்பது அவருடைய அறிவுரை. மனமாசு – வஞ்சகம் நிறைந்த நெஞ்சத்தார் எவ்வளவு பெற்றிருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை –
“ கற்றதம் கல்வியும் கடவுள் பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு
அற்றவர்க்கே பயனளிக்கும் என்பரால்-
                    என்பது காசிக்காண்டம் கூறும் உண்மையாகும்.
  மனம் ஒருத்தர் வசப்படாது நாளும் சுழன்று அல்லல்படுவதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

  கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை
 எடுக்க வல்லதும் இம்மனம் – என்பார்.
                  மண்ணில் நல்ல வண்ணம் வாழ  உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல் நன்று (குறள்.294) எனவே உயர்ந்த எண்ணங்களே மனத்தில் நிலவ வேண்டும். (குறள்.596) செல்லும் வழி மனத்தைச் செல்லவிடாது அடக்கின் எழுபிறப்பு நல்ல பயனேயாம். மனத்தை அடக்கி எல்லா நலனும் பெறலாம். மனத்தை அடக்கி ஆளும் திறம் எளிதோ எனின் – ஐயா அவர்கள் 
  “ பயிற்சி செய் பலன் கிடைக்கும் “ என்கிறார்கள்.
               இளைஞர் சமுதாயம் நலமுடன் வாழ- வளமுடன் வாழ அல்லும் பகலும் அதே சிந்தனையாய்ப் பிள்ளைகள் மீது பெற்றோரினும் பெரிதும் அக்கறைகொண்டு – வங்கிக் கடனுக்கு வழங்கும் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதறிந்து – பட்டத்திற்குப் படிப்பும் வாழ்க்கைக்குக் கல்வியும் வழங்கும் வள்ளன்மை உயர்ந்த சிந்தனையின் ஒளிவிளக்கு –
 “உடல் செய்யும் வேலை உழைப்பு அது ஆக்கம் – மனது செய்யும் வேலை சிந்தனை அது செயலுக்கு உருத்தரும் ஊக்கம்
-                                                                          கி.து.வாண்டையார் . இராகபாவம்-ப.77
-                       என்று ஐயா அவர்கள் கூறுவதுகொண்டு சிந்தனை செழுமை பெறவும் செயலில் ஊக்கம் பெறவும் மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பது இனிது புலனாகும்.
-      தன் மனத்தைத் தான் அடக்கி வெல்லல் ஓர் அரிய கலை- வித்தை  சிந்தயை அடக்கியே சும்மாவிருக்கின்ற திறம் அரிது என்றுணர்ந்த தாயுமான சுவாமிகள்.
-      “ மனமான வானரக் கைம்மாலை ஆகாமல்
-        எனையாள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ “
    என்று ஏங்குகிறார்.
திருமூலர்…
        உடம்பா ரழியின் உயிரா ரழிவர்
       திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
       உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
       உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
                    எனத் திருமந்திரம் கூறும் சிந்தனையைச் சிரமேற்கொண்டு உடம்பைப் பேணும் அரிய கலையை அறிந்த ஐயா அவர்கள் அவ்வனுபப் பேரின்பத்தை உயிர்கள் உணர எளிமையாய் எடுத்து இயம்புகிறார்கள்.
     தோற்றம் அரிதாய மக்கள் பிறப்பினால்
    ஆற்றும் திணையும் அறம் செய்க- பழமொ.365
                 என்பதறிந்து ஐயா அவர்கள் அரிய மக்கள் பிறப்பின் அருமை அறிந்துஇயன்றவரையின்றி முயன்று முயன்று அறம்புரிந்து வருகிறார்கள் . உடம்பை நல் உடம்பாக்கல் உயிரை நல் உயிராக்கல். அவ்வழிச் சிந்தனையை நற்சிந்தனையாக்கல் ஆகியன புரியும் ஐயா அவர்களிம் அறத்தொண்டிற்கும் ஆன்ம சேவைக்கும் ஈடாமோ இவ்வையம்.
தியானம்
         தியானம் – மன ஒழுக்கம் இருளிலிருந்து ஒளிக்குவர- பொய்யிலிருந்து உண்மைக்கு வர; பிறவியிலிருந்து விடுபட்டுப் பிறவா வாழ்வு பெற –
தியானம்
 “ தியானம் – ஒரு நிமிஷம் நல்லதை நினைத்து மனத்தை நெறிப்படுத்த-
  கண்களை மூடி நல்லதை நினைத்து ஒரே ஒரு நிமிடம் தியானம் – ஆன்மா பலம் பெறும் ; உடல் நலம் பெறும்.
காலையில் பள்ளி எழுந்ததும் அனந்தா ! கோவிந்தா ! கிருஷ்ணா ! என்று கூறி உங்கள் விருப்பத் தெய்வத்தைச் சிந்தித்து வணங்கி ஒரு நிமிடம் தியானம் செய்யுங்கள்.”தினம் தியானம் பழகு – நேயம் கைகொடுக்கும் ”  கி.து. வாண்டையார்- இன்பவாழ்வு. ப77  
 தியானம் – ஐயா அவர்கள் தான் பெற்ற இன்பத்தைத் தரணிக்கு நல்க விழையும் தயாள குணம்.
  “ எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
    தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே “
 என இறைவனிடம் தாயுமான சுவாமிகள்
வேண்டுகிறார்; அவ்வாறே ஐயா அவர்களும் தெய்வ அருட்கருணை பெற்றவர்கள்.
                   சீவகருண்ய ஒழுக்கத்தால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம்.இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் கண்டு நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர்  வள்ளலாரியம்.வள்ளலாரியத்தின் அவர்கள் உயிர்கள் மீது கருணைபுரிந்து தியான நெறியைப் போற்றி வற்புறுத்துகின்றார்கள்.
          ஐயா அவர்கள் உரைத்தவை யாவும் அவர்கள் உணர்ந்தவையே ! உயிர்கள் இன்புற்றுவாழ வேண்டும் என்னும் ஓர் உயரிய குறிக்கோள் ; உடலால் பயிற்சி நல்குவது; பொருளால் ஆயிரமாயிரம் நூல்கள் கொடையளிப்பது; ஆவியால் (மூச்சுப் பயிற்சி )ஆன்மா அமைதி பெற ஆவன நிகழ்த்துவது ஆகியன ஐயா அவர்களின் அருட்சேவைகளாகும். நோயற்ற வாழ்க்கையாகிய செல்வத்தை வாரி வழங்கும் ஐயா அவர்களின் மனத்திட்பமே வினைத் திட்பம் (குறள்- 661)
மனத் திட்பம்
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடும்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே  - திருமந்திரம்- 2770

வெளியெல்லாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது- கேசரி  முத்திரை இதனைத் தீக்கை என்றும் கூறுவர்.
            அருட்பிரகாச வள்ளலார். அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடும் அருள்வெளிப்பதி என்பது இருகண்களுக்கிடையே புருவ மத்தியில் அமைந்த இடைவெளியினை – இது கீழ் இரண்டும் மேல் ஒன்றுமாக அமைந்த ஃ முப்புள்ளி வடிவாகிய ஆயுதவெழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்குமேல் மத்தியில் அமைந்திருத்தலின் ‘ஒள’ கார எழுத்தினை அடுத்து கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்தற்கு உரியதாகும்.
           திருமூலர் கூறியவாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்ற வைத்துத் தியானிக்கும் முறையே சிறந்த தவமாகும் என்று விளக்கம் தருகிறார் க. வெள்ளைவாரணனார்.   
தியான அனுபவம்
          பூண்டித் திருக்கோயில் தியான மண்டபத்தில் தியானம் செய்தோம். அண்டவெளியில் எழுந்து நின்றதோ ஆன்மா ! ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் உயிர் கலந்து ஒன்றியதோ !  
தியானமண்டபத்துள் ஓம் என்னும் ஒலி உலாவரும் உயரிய தொழில்நுட்பம் எப்படி என்பது புரியாத புதிர். ஒரு புத்துணர்வு; ஒரு புதிய சுக அனுபவம் என்னுள் எழுந்தது.தியான மண்டபம் மன மாசு அகற்றும் மாயவித்தைக் களம். இஃது இறைவனோடு ஆடும் ஓர் அற்புத த் திருவிளையாடல். இறை அருள் ஆற்றல் கைவரப் பெற்ற ஐயா அவர்களின் சக்திக்குச் சான்றாக விளங்குகிறது.
 தியானத்தால் மனம் தெளிவடைகிறது; உடல் நலம் பெறுகிறது; உயிர் வளம் பெறுகிறது. வாழ்க்கையில் பயம் விலகும்; மரண பயம் விலகும்.
          தியானப் பயிற்சியால் பரம்பொருளை ஒளி வடிவாகக் காண இயலும்; பரம்பொருளை முகக் கண் கொண்டு பார்ப்பது மூடத்தனம்; அகக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்கிறது திருமந்திரம் –
  முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
  அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
  மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
  சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே – 2944
       பரம்பொருளை அகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது என்பது உண்மையன்றோ !
தியானம் -  அறிவியல் ஆய்வு
             இதய நோய் நிபுணர் டாக்டர் வி. சொக்கலிங்கம் கூறும் அறிவியல் கருத்துக்களை இங்கே சுட்டுவது மிகவும் பொருத்தமுடையதாகும்.
               “ பலவகை மன நிலைகளில் மூளையின் செயல்பாடுகள் சீராக அமையாததனால் உணர்ச்சி வயப்படும் உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன – அவற்றின் விளைவாக –
 
வேகமான இதயத் துடிப்பு
இரத்த அழுத்த நோய்
சர்க்கரை நோய்
இரத்தக் கொழுப்பின் அளவு மிகுதல்
               ஆகிய பிணிகள் ஏற்படுகின்றன. அதன் விளைவாக அவை ஒருவரைத் தீய பழக்கங்களான புகை பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றுக்கு ஆளாக்குகின்றன. நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிர்ப்பதனால் உடல் பருமனும் எடையும் அதிகமாகி இதய இரத்தக்குழாய்கள் சுருங்குவதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு உயிர்க்கொல்லி நோயான மாரடைப்புக்கு ஆளாக்குகின்றது.
                   இந்நோயினால் நட்டும் இந்தியாவில் ஒருமணி நேரத்திற்குக் குறைந்தது 90 பேர் உயிர் இழக்கின்றனர். இந்த அதிர்ச்சிதரும் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரேவழி மன இயல்பின் தன்மையை முறைப்படுத்துவதே.
             இந்நிலையை அடைய நம் முன்னோர்கள் சித்தர்கள் பலகாலமாகவே கூறிவருவது தியான முறைதான். தியானம் – தன்னை உணர்தல் என்றும் தன்னிலை அறிதல் என்றும் கூறப்படும். அது மனத்தை ஒரு நிலைப்படுத்தி எவ்விதச் சிந்தனையுமின்றி மன அமைதி கலையாது இருத்தலே. மனம் வாக்கு காயம் என்பவற்றின் செயல்களான சிந்தனை- சொல் –செயல் ஆகியவற்றின் சீரான ஒழுங்குமுறையைக் கைக்கொண்டு
வாழத்தவறினால் - -
வயிற்றுப்புண் ஆஸ்துமா தோல்நோய்கள் சர்க்கரை நோய் இரத்தக் கொதிப்பு மாரடைப்பு பக்கவாதம்  புற்றுநோய் முதலான கொடிய நோய்கட்கு ஆளாகி வாழ்நாள் முழுதும் பல வண்ணங்களிலான மருந்து மாத்திரைகட்கும் ஊசிமருந்துக்கும் இரையாகி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவர்.”
      ஐம்பொறிகளை அவற்றின் விருப்பப்படி செல்லவிடாது அடக்கி ஆளும் வல்லமை படைத்த மனிதன் அந்த அடக்கத்தால் ஆமையைப் போல் நூறு ஆண்டுகள் கடந்தும் வாழ்கிறான்.
           ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
           எழுமையும் ஏமாப் புடைத்துகுறள்- 126
  அறிவு உணர்ந்தவாறு கருத்தின்படி மனமும் அந்த நெறியில் நிற்கும். மனத்தின் கட்டளையை உடம்பும் கேட்டால் உயிர் இயக்கம் – அமைதியான இதயத் துடிப்பு மூலம் நீடித்து இயங்கிக் கொண்டே இருக்கும். வாழ்நாளும் நீடிக்கும் “ – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் – பக். 590-592
    இவ்வகையில் ஐயா அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் சான்றோர்க்குரிய நற்பண்புகள் என்பார் மூவாதியார்-
   சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
   வலியாகிப் பின்னும் பயக்கும் – ஐந்திணை எழுபது-5
          நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு அடைந்தவர்க்கு வன்மை மிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.
       பூண்டித் திருநகர் அடைந்தார் உடலும் உள்ளமும் வளம்பெற்று வள்முடன் வாழ்வர். இந்நகர் வந்தும் உய்யார் திசை எட்டும் உய்யும் வழியில்லை . கையில் கனி கொண்டீர் ; காய் கவர்தல் ஒழிவீர்!

 முனைவர் இரெ. குமரன் எழுதிய “ சத்திய ஜீவன் “ என்னும் நூலிலிருந்து பக்.153-160

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக