ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -43


மெய்ப்பொருள் காண்பது அறிவு -43
” இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.” –திருக்குறள்.
இல்லாரை இழித்துரைப்பர்; செல்வரைப் போற்றிப் புகழ்வர்.
”ஒத்தகுடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
 செத்த பினத்தின் கடை.” –நாலடியார்.
அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவர்.
“எங்கே தேடுவேன் பணத்தை
உலகம் செழிக்க உதவும் பணத்தை…”
“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.”
”காசேதான் கடவுளடா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா”--- திரைப்படப் பாடல் அடிகள்.
பணவிடு தூது.
“பாடுபட்டுத் தேடும் பணத்தைத் தூது அனுப்பினார் ஒரு தமிழ்ப் புலவர். பணவிடு தூது’ என்னும் நூலில் பனத்தின் சிறப்பும், பாட்டுடைத் தலைவனாகிய மாதை வேங்கடேசனது மாண்பும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
                                தூதுப் பொருளாகிய பணத்தை நோக்கி…
“வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத்
தாழ்வதும் உன்னுடைய தாழ்வாமே – கூழ்குடித்துக்
கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய்ச் சென்று செல்வர்
கிட்டப் பலகாலும் கெஞ்சிப் போய் – முட்ட முட்டத்
தாங்வாரற்றுத் தடுமாறி ராப்பகலாய்
ஏங்குவார் ஏக்கம் உன் ஏக்கமே – ஓங்கும்
பணம் என்னும் உன்னைப் படைக்காத சென்மம்
பிணம் என்பார் கண்டாய் பெரியோய்” – என்று புலவர் கூறுகின்றார்.” –ரா.பி.சேதுப்பிள்ளை. 6/8/.

1 கருத்து: